கேரளாவில் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அம்மாநில சுகாதாரத் துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதலில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் அக்டோபரில் ஊரடங்கு இல்லை என அறிவித்தார். ஆனால்,  கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடுவதைத் தடைசெய்து, கேரள அரசு 144 தடை உத்தரவை மாநிலம் முழுவதற்கும் விதித்துள்ளது.

இந்நிலையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியதாக கேரள முதல்வர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை விட கடந்த சில நாட்களாக அதிகமாகி வருகிறது கேரள முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட தகவலின்படி நேற்று மட்டும் புதிய கொரோனா நோயாளிகள் 9258 பேர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் நேற்று மட்டும் 4092 கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் 20 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
கேரளாவில் தற்போது கொரோனா நோயால் 77,482 பேர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.