நாடுமுழுவதும் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர்பர்சோத்தம் ரூபாலா   தெரிவித்தார்.

சமீபத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா, கர்நாடக மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடியை அறிவித்தன. இதனால், மத்தியஅரசுசார்பில் பயிர்கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்விகளுக்கு இரு அவைகளிலும் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபா நேற்று பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது-

நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. அதே சமயம், விவசாயிகள் பெற்ற கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்ய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது  ஒரு ஆண்டு அடிப்படையிலான குறுகியகால பயிர்கடன் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் பெறலாம். இதற்கு 7 சதவீதம்  வட்டி விதிக்கப்படுகிறது. கடனை சரியாகச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில் 4 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் அளித்த அறிக்கையின்படி, கடந்த 2003ம் ஆண்டு கணக்கில் 8 கோடியே 35 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. இதில் 4.34 கோடி விவசாய குடும்பங்கள் கடனில் சிக்கி இருக்கிறார்கள்.

2013ம் ஆண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ. 6 ஆயிரத்து 426 ஆக இருக்கிறது. ஆனால் அவர்களின் சராசரி பயிர்கடன் ரூ. 47 ஆயிரமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.