மும்ைபயின் தெற்குப் பகுதியான பெஹந்தி பஜாரில் 5 மாடி குடியிருப்பு  இடிந்த விபத்தில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை உள்ளிட்ட 33 பேர் பலியாகினர். இதையடுத்து, தேடும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையின் தெற்குப் பகுதியில் பெஹந்தி பஜார் அமைந்துள்ளது. அங்குள்ளபக்மோதியா தெருவில்  117 ஆண்டுகள் பழைமையான அடுக்குமாடிக் 5 மாடி அடுக்குமாடி குடியிருப்பு  ஒன்று நேற்றுமுன்தினம் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த குடியிருப்பில் 12 வீடுகளும், தரைத்தளத்தில் ஒரு குடோனும் செயல்பட்டு வந்தது.

கட்டிடம் இடிந்த  சம்பவம் குறித்து உடனடியாக மும்பை மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக 90 பேர் கொண்ட பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர், மண் அள்ளும் எந்திரங்கள்,ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதமாக நடந்தன.

இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 33 பேர் பலியானார்கள், 14 பேர் சிகிச்சைக்காக மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஜே.ஜே. மருத்துவமனையின் டீன் டி.பி. லஹானே கூறுகையில், “ மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 33 பேர் பலியானார்கள். படுகாயங்களுடன் 14 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறார்கள். மேலும், மீட்புப்பணியில் காயமடைந்த 3 தீயணைப்பு வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 23 ஆண்கள், 9 பெண்கள், 20 நாள் குழந்தை பலியானது’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே கட்டிடம் இடிந்த பகுதியில் நடந்துவந்த மீட்பு பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மீட்புப்பணி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ இடிபாடுகளுக்குள் வேறுயாரும் சிக்கி இருப்பார்கள் என்று எங்களுக்கு தோன்றவில்ைல. முற்றிலும் தேடிவிட்டோம். அதனால், தேடும் பணியை நிறுத்திவிட்டோம். இருப்பினும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

மும்பையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர்ந்து மழை  பெய்தது. அந்த மழையில் 117 ஆண்டு பழமையான இந்த கட்டிடம் நனைந்து ஊறியதால், இந்த கட்டிடம் இடிந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கட்டிடம் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.