காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசிய பயங்கரவாதிகள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்...
ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் தொடர்பு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.. ஒருவர் காயம் அடைந்தார்.. பூஞ்ச்-ரஜோரி பகுதியில் இந்திய ராணுவத்தினர் பலியான 4-வது சம்பவம் இதுவாகும்.
இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது, இந்த தாக்குதல் சம்பவம் நடந்த பகுதி பிம்பர் காலியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) இந்திய எல்லைக்குள் அடர்ந்த காடுகளாகும். அப்பகுதியில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் பயங்கரவாதிகள், காடுகளில் ஒளிந்துகொண்டு தாக்குதல் நடத்த காத்திருந்தனர்..
அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, பயங்கரவாதிகள் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளை பயன்படுத்தினர் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கையெறி குண்டு தாக்குதலால், வாகனம் தீப்பிடித்ததா அல்லது இந்தியப் படையினரை சுட்டு வீழ்த்திய பின்னர் பயங்கரவாதிகளால் தீ வைக்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே ராணுவ வீரர்கள் அடங்கிய குழு பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது..மே மாதம் ஸ்ரீநகரில் நடந்த ஜி20 நிகழ்வுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. கடந்த ஒரு மாதமாக, பாகிஸ்தான் அரசு, ஜி20 உறுப்பினர்களை, குறிப்பாக சீனாவை, இந்த நிகழ்வைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சூழலில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது..
ஜம்மு காஷ்மீர் காவல்துறையை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி பேசிய போது “ ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தில் வன்முறையை தூண்டுவதற்காக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளால் வேண்டுமென்றே இந்த சம்பவம் திட்டமிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே G20 நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் மத்தியில் அச்சத்தை பரப்பினார்கள்..” என்று தெரிவித்தார்..
இதையும் படிங்க : கர்நாடக தேர்தல் 2023: 75/53.. இதென்ன கணக்கு.! புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்த பாஜக மற்றும் காங்கிரஸ்.!!