உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாதாரண டெம்போ டிரைவரான ஸ்ரவன் குமார் விஸ்வகர்மா, தனது விடாமுயற்சியால் 'ஷங்க் ஏர்' என்ற புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். நடுத்தர மக்களும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்க உள்ளார்.
"வானம் வசப்படும்" என்பதற்குச் சான்றாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர், சாதாரண டெம்போ டிரைவரிலிருந்து இந்தியாவின் புதிய விமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
யார் இந்த ஸ்ரவன் குமார் விஸ்வகர்மா?
கான்பூரைச் சேர்ந்த ஸ்ரவன் குமார் விஸ்வகர்மா, வெறும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த நகரின் போக்குவரத்து நெரிசலில் ஒரு சாதாரண லோடர் மற்றும் டெம்போ டிரைவராகப் பணியாற்றி வந்தார். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவருக்குப் படிப்பில் பெரிய ஆர்வம் இல்லை. "தெருக்களும், டிராபிக்கும் தான் எனது வகுப்பறைகள்" என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.
2014-ம் ஆண்டு இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சிறிய அளவில் சிமெண்ட் வியாபாரத்தில் இறங்கிய ஸ்ரவன், பின்னர் இரும்பு (Steel), சுரங்கம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் தனது கால்தடத்தைப் பதித்தார்.
விடாமுயற்சியால் இன்று அவரிடம் 400-க்கும் மேற்பட்ட லாரிகள் கொண்ட பெரிய போக்குவரத்து நிறுவனம் உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் கிடைத்த மூலதனத்தையும் நம்பிக்கையையும் கொண்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'ஏர்லைன்' தொடங்கும் கனவை நோக்கி நகர ஆரம்பித்தார்.
'ஷங்க் ஏர்' (Shankh Air)
ஸ்ரவன் குமார் தொடங்கியுள்ள 'ஷங்க் ஏர்' நிறுவனம், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழைப் (NOC) பெற்றுள்ளது. 2026 ஜனவரி முதல் இந்த விமானச் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ளது.
லக்னோவை மையமாகக் கொண்டு டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 3 ஏர்பஸ் (Airbus) விமானங்கள் மூலம் சேவை தொடங்கப்படும். அடுத்த சில மாதங்களில் இது 5-ஆக உயர்த்தப்படும்.
"விமானம் என்பது பஸ் அல்லது டெம்போ போன்ற ஒரு போக்குவரத்து சாதனம் தான். அது ஒரு சிலருக்கு மட்டுமான ஆடம்பரமாக இருக்கக் கூடாது" என்பது ஸ்ரவனின் கொள்கை. எனவே, நடுத்தர மக்களும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவை அமைய உள்ளது.
தன்னம்பிக்கை நாயகன்
தனது வெற்றி குறித்து ஸ்ரவன் கூறுகையில், "நாங்கள் வளர்ந்த சூழலில், அன்றாட வயிற்றுப் பிழைப்புக்குச் சம்பாதிப்பதே பெரிய விஷயம். அதற்கு மேல் கனவு காண்பது சாத்தியமற்றதாகத் தெரிந்தது. ஆனால், தோல்விகள் என்னைத் தடுத்து நிறுத்தவில்லை; அவை எனக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுத்தன," என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து உருவாகும் முதல் தனியார் விமான நிறுவனமான 'ஷங்க் ஏர்', இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


