தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், டெல்லியில் முகாமிட்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அஸ்திவாரம் போடுவதாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் தெலங்கானா மாநிலத்தில், சந்திரசேகர் ராவ், வெற்றி பெற்று 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், டெல்லி சென்றுள்ள சந்திரசேகர் ராவ், பிரதமர் மேடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.  தெலுங்கானா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோதியை அவர் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், 2019 நாடாளுமன்ற தேர்தல் மிகவும் ஆர்வமுடன் எதிர் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்து வருகிறது. காங்கிரசார், நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் போல், நாடாளுமன்ற தேர்தலும் நடக்கும். பாஜக தோல்வி அடையும் என கூறி வருகின்றனர். 

ஆனால் பாஜகவினர், இனி எந்த தேர்தல் வந்தாலும், அதை சந்தித்து, மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்பார் என்றும், தேர்தலுக்கான அனைத்து திட்டமும் தயாராக இருப்பதாக கூறி வருகின்றனர். இதையொட்டி தெலங்கானாவில், பாஜக கூட்டணியுடன் சந்திர சேகர் ராவ், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், அதற்காக பாஜக அமைச்சர்களை அவர் சந்தித்து வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.