ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரையும் பாஜக உதவிக் குழு: அண்ணாமலை தகவல்
ஒடிசாவில் இருநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த ரயில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக பாஜக சார்பில் உதவிக்கு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் ஆகியவை மோதிக்கொண்ட கோர விபத்தில் 288 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை நடந்த இந்த விபத்து கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்துக்குள்ளான ரயில்களில் பயணித்த தமிழர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய தமிழ்நாடு சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, காயம் அடையவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!
இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழ்நாடு பாஜக சார்பில் ஒரு குழுவினர் ஒடிசா மாநிலத்துக்குச் செல்வதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட கோர சம்பவம் நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தொய்வின்றி இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்த விபத்தில் சிக்கிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு பரிபூரண உதவி செய்து, அவர்கள் நல்ல நிலையில் தமிழகம் திரும்பி தங்கள் குடும்பத்தாருடன் இணைந்திடும் வரை துணைநின்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட தமிழக பா.ஜ.க சார்பில் கீழ்கண்ட குழுவானது அமைக்கப்பட்டு, இக்குழுவானது இன்றே ஒடிசா விரைந்து தங்களை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை வெளி வர வேண்டும்: மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி!
தமிழக பா.ஜ.க உதவி குழு விவரம்:
1. திரு.K.ரவிச்சந்திரன் (தேசிய உறுப்பினர், ரயில்வே பயணிகள் வசதிகள் ஆலோசனை குழு)
PH : 98409 45919
2. திரு.K.P.ஜெயகுமார் (மாநில தலைவர், பிற மொழி பிரிவு)
PH : 9444049949
3. திரு.A.N.S.பிரசாத் (முன்னாள் மாநில தலைவர், ஊடக பிரிவு)
PH : 98401 70721
விபத்தில் சிக்கிய அல்லது ரயிலில் பயணித்த தங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் யாருக்கேனும் எவ்வித உதவி தேவைப்பட்டாலும் இவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.