உலகிலேயே மிக பழமையான மொழி தமிழ்! இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை! பிரதமர் மோடி!
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றிப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி 117-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி: உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயமாகும். இது எங்களுக்கு பெருமையான விஷயம். உலக நாடுகளில் தமிழ்மொழியை கற்று கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
கடந்த மாத இறுதியில் பிஜியில் மத்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் பிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் மொழி கற்பிப்பது இதுவே முதல் முறையாகும். பிஜி நாட்டு மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கலை முதல் ஆயுர்வேதம் வரையிலும், மொழியில் இருந்து இசை வரையிலும் உலகில் முத்திரை பதித்து கொண்டு இருக்க இந்தியாவில் நிறைய இருக்கிறது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது. 2025ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அன்று, நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி, 75 ஆண்டுகள் நிறைவு அடைகிறது. நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மரபுடன் இணைக்க ஏதுவாக, http://Constitution75.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் குழந்தைகள் பார்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.