உடல்நலக்குறைவால் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அரசியல் வாழ்வு எப்போதுமே தேசியநலன் சார்ந்தும், பொதுநலனை பிரதானமாகக் கொண்டும் இருந்தது என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் டுவிட்டர்  பதிவில்;- ராம்விலாஸ் பாஸ்வானின் கனவான பீகாரின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், முன்னேற்றம் ஆகியவற்றை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது. ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு என்னை வேதனையடைச் செய்கிறது. ஏழைகளின் நலனுக்காகவும், உரிமைகளுக்காவும் எப்போதும் போரிட்டவர் பாஸ்வான். அவரின் அரசியல் வாழ்வு எப்போதுமே தேசியநலன் சார்ந்தும், பொதுநலனை பிரதானமாகக் கொண்டும் இருந்தது. ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு இந்திய அரசியலில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கும்.

1975-ல் நடந்த அவசரநிலையை எதிர்த்துப் போராடியபோதும், கொரோனா வைரஸ் காலத்தில் பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தியதிலும் ராம்விலாஸ் பாஸ்வானின் பங்கு அளப்பரியது. பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பாஸ்வான் பணியாற்றியுள்ளார். அவரின் எளிமை, கனிவான குணத்தால் அனைவராலும் விரும்பப்பட்டார். ராம்விலாஸ் பாஸ்வானை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி என அமித் ஷா பதிவிட்டுள்ளார்.