உலகின் கொடிய நோய்களில் ஒன்றான புற்று நோயில் இருந்து தான் விடுபட்டது மட்டுமல்லாமல் பிறரும் புற்றுநோயில் இருந்து எளிதில் விடுபடும் வகையில் பத்திரிகையாளர் ஒருவர் பிரத்யேக வலைதளம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
ராஜ்தீப் சர்தேசாய் என்ற பத்திரிகையாளர் தனது தனிப்பட்ட யூடியூப் சேனலில் ஸ்டிரெய்ட் பேட் என்ற தலைப்பில் பல வீடியோகளை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் புற்று நோயில் இருந்து தாம் எப்படி விடுபட்டேன் என்பதையும், புற்று நோயில் இருந்து அனைவரும் மீண்டு வருவது எப்படி என்பது குறித்தும் விளக்கி உள்ளார்.
வீடியோவில் அவர் பேசுகையில், “கடந்த ஆகஸ்ட் மாதம் தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் வேறு எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் புற்று நோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அப்போது அறுவை சிகிச்சை நிபுணரான எனது மகன் எனக்கு ஆறுதல் கூறினார். இந்தியாவில் ஆண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயில் சிறுநீரக புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தான் தற்போது உங்களுக்கு வந்துள்ளது. இதனை எளிதில் குணப்படுத்திவிட முடியும் என்று கூறி என் மகன் என்னை தேற்றினார்.
இதுபோன்ற புற்றுநோய் பாதிப்பின் போது எப்படி மன உறுதியுடன் இருப்பது, இதனை எப்படி தைரியமாக எதிர்கொள்வது என பலரது பேச்சு, புத்தகங்களை படித்து என் மன உறுதியை வலுப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் புற்றுநோய் முற்றிலுமாக சரியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.
எனக்கு ஏற்பட்ட புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் அதனை சரி செய்வது மிகவும் எளிதாக அமைந்தது. இருந்தாலும் நான் என்னை அதிர்ஷ்டசாலியாக நினைக்கிறேன். நான் இதில் இருந்து மீண்டு வந்ததற்காக சிலருக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் இந்த தீபாவளியை கொண்டாட விரும்புகிறேன். அதன்படி மருத்துவர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்களும் உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் என்பவர்கள் உங்களுக்கு உண்மையானவர்களாகவும், ஆபத்து காலத்தில் உங்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் எனக்கான மன உறுதியை ஏற்படுத்தினர். நான் மீண்டு வந்ததற்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனையும் முக்கிய காரணம். இந்தியாவின் தலை சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றில் நான் சிகிச்சை பெற்றேன். இதே போன்ற நிலை நாடு முழுவதும் ஏற்பட வேண்டும். இதற்காக பொது சுகாதாரத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து இதனை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நான் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெறும் வகையில் cansupport.org என்ற வலைதளத்தைத் தொடங்கி உள்ளேன். இந்த வலைதளம் மூலம் உதவி செய்வதன் அடிப்படையில் நீங்களும் உங்கள் தீபாவளியை கொண்டாடலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

