நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் மனித தொண்டையில் புதிய உறுப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். புதிய புற்றுநோய் ஸ்கேனிங் பரிசோதனைகளை மேற்கொண்டபோது, தொண்டையின் மேல் பகுதியில் ஆழமாக இருக்கும் சில சுரப்பிகளை அவர்கள் தற்செயலாக கண்டறிந்தனர்.

நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் மனித தொண்டையில் புதிய உறுப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். 2020-ஆம் ஆண்டில் புதிய புற்றுநோய் ஸ்கேனிங் பரிசோதனைகளை மேற்கொண்டபோது, தொண்டையின் மேல் பகுதியில் ஆழமாக இருக்கும் சில சுரப்பிகளை அவர்கள் தற்செயலாக கண்டறிந்தனர். இந்த கண்டுபிடிப்பு மனித உடற்கூறியல் பற்றிய புரிதலை மாற்றக்கூடும்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுரப்பிகள், 'டூபரியல் உமிழ்நீர் சுரப்பிகள்' (tubarial salivary glands) என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை மூக்கின் பின்புறப் பகுதியை ஈரமாக வைத்திருக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மேலும், தலை மற்றும் கழுத்துப் பகுதி புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை பெறும் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

தற்செயலான கண்டுபிடிப்பு

நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்கள், புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறியும் PSMA PET-CT ஸ்கேன் பரிசோதனையை செய்து கொண்டிருந்தனர். இந்த ஸ்கேன் முறையில், ஒரு கதிரியக்கக் கலவை நோயாளிக்கு செலுத்தப்பட்டு, அது உடலின் எந்தப் பகுதிக்கு செல்கிறது என்பதை மருத்துவர்கள் கண்காணிக்க முடியும்.

சாதாரணமாக புரோஸ்டேட் கட்டிகளைக் கண்டறிய இந்த முறை பயன்படுத்தப்பட்டாலும், ஆராய்ச்சியாளர்கள் மூக்கின் பின்புறத்தில் உள்ள நாசிக்குழியில் (nasopharynx) இரண்டு எதிர்பாராத பகுதிகள் பிரகாசமாக ஒளிர்வதைக் கண்டனர். சுமார் 1.5 அங்குல நீளமுள்ள இந்த சுரப்பிகள், ஏற்கனவே அறியப்பட்ட முக்கிய உமிழ்நீர் சுரப்பிகளைப் போலவே இருந்தன.

பக்க விளைவுகளைக் குறைக்க உதவும்

இந்த புதிய சுரப்பிகள், புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சையின்போது ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கதிரியக்க சிகிச்சையின்போது ஏற்கனவே அறியப்பட்ட உமிழ்நீர் சுரப்பிகள் சேதமடைவதால், நோயாளிகளுக்கு சாப்பிடுவது, விழுங்குவது மற்றும் பேசுவது போன்ற செயல்களில் சிரமம் ஏற்படுகிறது. புதிய சுரப்பிகளுக்கும் கதிர்வீச்சு படும்போது இதே போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

700-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் ஆய்வு செய்ததில், இந்த புதிய சுரப்பிகளுக்கு எவ்வளவு கதிர்வீச்சு செல்கிறதோ, அவ்வளவு அதிகமான சிக்கல்கள் நோயாளிகளுக்கு ஏற்படுவது தெரிய வந்தது. எனவே, இந்த புதிய சுரப்பிகளை பாதுகாக்கும் வகையில் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டால், பக்கவிளைவுகளை கணிசமாகக் குறைத்து, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.