Neet Exam | நீட் தேர்வு ரத்தாகுமா? முறைகேடு மீதான 38 மனுக்கள் மீது தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணை!
Neet Exam UG Row | நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுகள் மீது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கிறது. மனுதாரர்கள் மறுபரிசோதனை கோரும் வேளையில், அரசாங்கமும் NTAவும் அதற்கு எதிராக வாதிடுகின்றனர்.
மருத்துவ நுழைவுத் தேர்வு NEET-UG 2024 முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்களை ஒரே தொகுப்பாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (இன்று) விசாரிக்கும் என அறிவித்தது. கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மீண்டும் தேர்வை நடத்த நீதிமன்றத்திடம் உத்தரவு கோரிய மனுக்களும் இதில் அடங்கும்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் MBBS, BDS, Ayush மற்றும் இதர மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்களை இன்று விசாரிக்கிறது.
நீட் குற்றச்சாட்டு
நீடி வினாத்தாள் கசிவு மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் முரண்பாடுகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் அடுக்கின. எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720/720 முழு மதிப்பெண்களைப் பெற்றனர். மேலும், ஹரியானாவில் உள்ள ஒரே மையத்தில் இருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட 6 பேர் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி எனவும் கேள்விகள் எழுந்தன.
நீட் தேர்வு கவுன்சிலிங் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையில், மத்திய அரசும், NEET-UG-ஐ நிர்வகிக்கும் தேசிய தேர்வு முகமையும் (NTA) தேர்வை ரத்து செய்வதற்கு எதிராக வாதிட்டது, மத்திய கல்வி அமைச்சர், நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில், “இந்தியா முழுவதும் நடத்தப்படும் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் மறு தேர்வு அல்லது தேர்வு ரத்து கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வில் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து, தேர்வை ரத்து செய்யவும், மறுதேர்வு நடத்தவும், நீதிமன்ற கண்காணிப்பு விசாரணையை கோரவும் மனுக்கள் கோரியுள்ளன. இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் குறித்து சிபிஐ விசாரணையை மேற்கொண்டது. NTA மூலம் வெளிப்படையான, மென்மையான மற்றும் நியாயமான தேர்வுகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்மொழிவதற்காக அரசாங்கம் உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. ஏஜென்சியின் தலைவரும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.