முதுநிலை நீட் தேர்வு தேதியை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்.. 2 ஷிப்டுகளில் நடைபெறும் என்று அறிவிப்பு!
2024ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும் என்று மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
நீட் முதுகலை தேர்வு ஆனது முன்னதாக ஜூன் 23-ம் தேதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நீட்-பிஜி நுழைவுத் தேர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “22.06.2024 தேதியிட்ட NBEMS அறிவிப்பின் தொடர்ச்சியாக, NEET-PG 2024 தேர்வு நடத்துவது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆகஸ்ட் 11ம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும். NEET-PG 2024 இல் தோன்றுவதற்கான தகுதிக்கான கட்-ஆஃப் தேதி ஆகஸ்ட் 15, 2024 ஆக தொடரும்” என்று வாரியம் தெரிவித்துள்ளது. சில போட்டித் தேர்வுகளின் நேர்மை குறித்த குற்றச்சாட்டுகளை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்-பிஜி நுழைவுத் தேர்வை ஜூன் 22ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு மத்திய சுகாதார அமைச்சகம், மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) மற்றும் அதன் தொழில்நுட்ப கூட்டாளியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் சைபர் செல் அதிகாரிகளுடன் பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த முறை நடக்கவுள்ள நீட்-பிஜி நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மருத்துவ மாணவர்களுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு-முதுகலை (NEET-PG) நுழைவுத் தேர்வை NBEMS டிசிஎஸ் உடன் இணைந்து நடத்துகிறது.