அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளது.
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை ஜூலை 21ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு முன்னுதாரணம் அற்றது எனவும் குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
NDA என்றால் புதிய இந்தியா, வளர்ச்சி, நம்பிக்கை: புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி
மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி மற்றும் வழக்கறிஞர் எஸ். பிரசன்னா ஆகியோர் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதனை ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “மோடி” என்ற பொதுப் பெயரைக் குறிப்பிட்டு லலித் மோடி, நிரவ் மோடி, பிரதமர் மோடி ஆகியோரை விமர்சித்தார். அந்தப் பேச்சு மோடி என்ற சமூகத்தின் மீதான அவதூறு என்று கூறி குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சூரத் விசாரணை நீதிமன்றம் ராகுல் காந்தி குற்றவாளி என்று கூறி 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டன. இதனால், ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
பொன்முடிக்கு நெருக்கடி! ரூ.81.7 லட்சம், வெளிநாட்டு பணம்... அமலாக்கத்துறை கூறும் அதிர்ச்சித் தகவல்கள்