NDA என்றால் புதிய இந்தியா, வளர்ச்சி, நம்பிக்கை: புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி என்.டி.ஏ. ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்.
பெங்களூருவில் 26 எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு முடிந்துள்ள நிலையில், ஆளும் பாஜக தலைமையில் 38 தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் டெல்லியில் கூடியுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' (I-N-D-I-A) என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக பிரதமர் மோடி என்டிஏ (NDA) என்பதற்கு புதிய விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், N= New India (புதிய இந்தியா), D=Development (வளர்ச்சி), A= Aspiration (நம்பிக்கை) என்று குறிப்பிட்டார். எதிர்மறை எண்ணத்துடன் சேரும் கூட்டணி வெற்றி பெறா முடியாது என்றும் பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி அடையும் எனவும் கூறினார்.
"25 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்தப் பயணத்தில் இன்னொரு தற்செயல் நிகழ்வும் உள்ளது. வரவிருக்கும் 25 ஆண்டுகளில் ஒரு பெரிய இலக்கை அடைய நமது நாடு பெரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரம் இது. அந்த இலக்கு வளர்ந்த இந்தியா, தன்னிறைவு பெற்ற இந்தியா என்பதுதான்" என பிரதமர் மோடி தெரிவித்தார்.
காலத்தை வென்ற கூட்டணி! 38 கட்சிகள் கூடத்திற்கு முன் பிரதமர் மோடி பெருமிதம்!
"நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் எப்போதும் நேர்மறையான அரசியலைத்தான் செய்தோம். எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள், அப்போதைய அரசாங்கங்களின் மோசடிகளை வெளியே கொண்டு வந்தோம். மக்களின் ஆணையை அவமதிக்கவில்லை. ஆளும் அரசாங்கங்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் அந்நிய சக்திகளின் உதவியைப் பெற்றதில்லை. நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களில் நாங்கள் ஒருபோதும் தடைகளை ஏற்படுத்தவில்லை" என்று பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறது. தேசத்தின் பாதுகாப்புக்குத்தான் முதலிடம், நாட்டின் முன்னேற்றம்தான் முதலிடம், மக்கள் அதிகாரத்துக்குதான் முதலிடம்" என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, "இந்தியா முழுவதும் உள்ள எங்கள் மதிப்புமிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுப்பினர்கள் இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடையது காலத்தால் சோதிக்கப்பட்ட கூட்டணியாகும். இது மேலும் தேசிய முன்னேற்றம் மற்றும் பிராந்திய விருப்பங்களை நிறைவேற்ற முயல்கிறது" எனக் கூறினார்.
கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தபோது, என்டிஏ கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதிமுக தவிர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சந்திரயான்-3 விண்கலத்தின் அடுத்த முன்னேற்றம்! 2வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி!