நாட்டில் 14 முதல் 18 வயது சிறார்களுக்கு சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நேபாளத்தில் இதேபோன்ற தடையால் ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களைச் சுட்டிக்காட்டி, இந்த மனுவை ஏற்க மறுத்துவிட்டது.
நாட்டில் 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பதன் விளைவுகள் குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. சமீபத்தில் நேபாளத்தில் நடந்த வன்முறை போராட்டத்தையும் சுட்டிக்காட்டியது.
நேபாள சம்பவத்தைக் குறிப்பிட்டு மனு தள்ளுபடி
சிறார் நலன் மற்றும் எதிர்காலம் கருதி, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவைப் போல இந்தியாவிலும் 14 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, "நேபாளத்தில் சமூக வலைத்தளப் பயன்பாட்டை நிறுத்தியதால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதைப் பார்த்தீர்களா?" என்று கேள்வியெழுப்பி, தடை விதிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய வன்முறை மற்றும் ஆட்சி கவிழ்ப்பு போன்ற தீவிரமான விளைவுகள் குறித்துக் கோடிட்டுக் காட்டியது. இதைத் தொடர்ந்து, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து நிராகரித்தது.
நாடு முழுவதும், சிறார்கள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி, படிப்பில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கை சீரழிந்து வருவதாக மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பல இடங்களில் 'ரீல்ஸ்' மோகத்தால் உயிரை இழக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. உதாரணமாக, சமீபத்தில் தூத்துக்குடியில், ரயில் மீது ஏறி 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சோகச் சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் நடந்த Gen Z போரட்டம்
அண்மையில் நேபாளத்தில், சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள Gen Z இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டதில் மிகப்பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இதன் விளைவாக அந்நாட்டில் ஆட்சி கவிழக்கப்பட்டது. அதுபோன்ற விளைவுகளைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் சமூக வலைத்தளத்திற்கு கட்டுப்பாடு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது.
