மடகாஸ்கரில் Gen Z கிளர்ச்சி! நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர்.. ஆட்சிக் கைப்பற்றிய ராணுவம்!
மடகாஸ்கரில் ஊழல் மற்றும் வறுமைக்கு எதிராக 'Gen Z' இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடினார். தற்போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அறிவித்துள்ளது.

மடகாஸ்கரில் Gen Z போராட்டம்
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் ராணுவக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தனது உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டுத் தப்பி ஓடிய நிலையில், அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மடகாஸ்கரில் நிலவும் ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அந்நாட்டின் 'Gen Z' இளைஞர்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இந்தக் கிளர்ச்சியில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, இளைஞர்களின் போராட்டத்துக்கு ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். அதிபர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால், ராணுவம் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா குற்றம்சாட்டினார்.
அதிபர் உயிருக்குப் பயந்து தப்பியோட்டம்
இந்தச் சூழ்நிலையில், அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டுத் தப்பி ஓடி உள்ளார். அவர் பிரான்ஸ் ராணுவ விமானத்தின் மூலம் நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
ராணுவக் கிளர்ச்சியைத் தொடர்ந்து தனது உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறியதாக அதிபர் ரஜோலினா தெரிவித்தார். இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “என் உயிரைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அவர் தனது உரையில் அதிபர் பதவியை இராஜினாமா செய்வதாகச் சொல்லவில்லை.
ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது
அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தப்பி ஓடிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சிடேனி ராண்ட்ரியானா சோலோனியாகோ அறிவித்துள்ளார். அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, விரைவில் மக்கள் அரசாங்கத்தை அமைப்பதற்காகப் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் பிடியில் மடகாஸ்கர்
முன்னதாக, பிரான்சின் காலனி ஆதிக்க நாடாக மடகாஸ்கர் இருந்து வந்தது. காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னரும் மடகாஸ்கரில் தனது படைவீரர்களை பிரான்ஸ் நிலை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.