ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ததை அடுத்து, சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்கிறார். Gen Z குழுவான "வி நேபாளிக் குழு" நாடாளுமன்றத்தைக் கலைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
நேபாளத்தில் அரசுக்கு எதிரான பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்த சுஷிலா கார்க்கி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று இரவு 8:45 மணிக்கு அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ராம் சந்திர பௌடல் இல்லத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Gen Z குழுவின் முக்கிய நிபந்தனைகள்
நேபாளத்தின் இளைஞர் குழுவான "வீ நேபாளிக் குழு" (We Nepali Group), சுஷிலா கார்க்கியின் தலைமைக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தைக் கலைப்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த குழுவின் தலைவர் சுதன் குருங், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தங்கள் முக்கிய கோரிக்கையாக இருப்பதாகவும், அதன் பின்னரே மற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் கூறினார்.
Gen Z குழுவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஒரு புதிய அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்றும், அதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் குருங் தெரிவித்துள்ளார். அமைச்சரவை உருவாக்கம் மற்றும் தொடர்புடைய செயல்முறைகள் குறித்து இன்னும் விவாதங்கள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
யார் இந்த சுஷிலா கார்க்கி?
மூத்த சட்ட வல்லுநரும் முன்னாள் நீதிபதியுமான சுஷிலா கார்க்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) படித்தவர். அவருக்கு அதே பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்ததாகவும், ஆனால் அதை அவரே நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. சுஷிலா கார்க்கி நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போராட்டங்களை முன்னெடுத்து வரும் "ஹமி நேபாலி" என்ற குழுவின் பிரதிநிதிகளும், நேபாள ராணுவ தலைமை அதிகாரியும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தைகளில் சுஷிலா கார்க்கியை இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்கும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
