நேபாளத்தில் ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், சமூக வலைத்தளத் தடை, போராட்டங்கள், வன்முறை, பிரதமர் ராஜினாமா, ராணுவக் கட்டுப்பாடு, சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பியோட்டம் என பல நிகழ்வுகள் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

நேபாளத்தில் அரசுக்கு எதிராக Gen Z இளைஞர்களின் வன்முறை போராட்டத்திற்கு மத்தியில், அந்நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைகளில் இருந்து சுமார் 15,000 கைதிகள் தப்பியோடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் தப்பிக்க முயன்றபோது போலீசாருடன் ஏற்பட்ட மோதல்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய கைதிகளில் சிலர் மீண்டும் பிடிபட்டுள்ளனர். சிலர் தாங்களாகவே திரும்பி வந்து சரணடைந்துள்ளனர். தப்பியோடியவர்களை தேடிப் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நேபாள அரசின் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில், ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பெரும் மக்கள் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. ஊழலுக்கு எதிரான சமூக வலைத்தளப் பிரசாரங்களில் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அமைச்சர்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், நேபாள சட்டப்பட்டி பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களுக்கு நேபாள அரசு செப்டம்பர் 4ஆம் தேதி தடை விதித்தது. இது Gen Z தலைமுறையினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். செப்டம்பர் 8ஆம் தேதி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

வன்முறை போராட்டம்

ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் சமூக வலைத்தள தடையைக் கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டம், பெரும் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தோல்வியடைந்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, தலைநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இராணுவம் குவிக்கப்பட்டது. போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார். மேலும், போராட்டக்காரர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக சமூக வலைத்தளங்கள் மீதான தடையையும் அரசு நீக்கிக் கொண்டது.

தீக்கிரையான கட்டிடங்கள்

ஆனாலும், போராட்டக்காரர்கள் அமைதியடையவில்லை. காத்மாண்டு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. வன்முறை அதிகரித்ததை அடுத்து, பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம், அதிபர் அலுவலகம், உச்ச நீதிமன்றம் எனப் பல அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதனால், செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் பாதுகாப்புப் பணிகளை இராணுவம் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. நாடு முழுவதும் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.