சமீபத்தில் பிரேக்-அப் ஆனதால் விடுப்பு கேட்ட Gen Z ஊழியரின் நேர்மையான லீவு லெட்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த ஊழியரின் வெளிப்படையான குணத்தைப் பாராட்டிய தலைமை அதிகாரி விடுப்பை உடனடியாக அனுமதித்தார்.
Gen Z-யின் வெளிப்படையான குணத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது ஒரு லீவு லெட்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
குருகிராமில் (Gurugram) உள்ள நாட் டேட்டிங் (Knot Dating) நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜஸ்வீர் சிங் (Jasveer Singh), தனது ஊழியர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து இந்த உரையாடலைத் தொடங்கினார். அதில், "Gen Z-க்கு ஃபில்டர்ஸ் (filters) என்றெல்லாம் கிடையாது!" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஊழியரின் மின்னஞ்சல் இதுதான்:
"சார், எனக்கு சமீபத்தில் பிரேக்-அப் ஆகிவிட்டது. என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்குச் சிறிது ஓய்வு தேவை. இன்று நான் வீட்டில் இருந்து வேலை செய்கிறேன், ஆனால் 28-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை விடுப்பு எடுக்க விரும்புகிறேன்."
இந்தக் கடிதத்தைப் பகிர்ந்த ஜஸ்வீர் சிங், இதுதான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் நேர்மையான லீவு லெட்டர் என்று தெரிவித்துள்ளார்.
நெகிழ்ச்சியான பதில்
இந்த வெளிப்படையான மின்னஞ்சல், பணியிட கலாச்சாரம், குறிப்பாக Gen Z ஊழியர்களிடையே உருவாகி வரும் புதிய அணுகுமுறை பற்றிய விவாதத்தைத் தூண்டியது. ஜஸ்வீர் பதிவின் பின்னூட்டத்தில் ஒரு பயனர், "முக்கியமான கேள்வி என்னவென்றால், நீங்கள் விடுப்பை அனுமதித்தீர்களா? என்பதுதான்" என்று கூறினார். அதற்குப் பதிலளித்த ஜஸ்வீர் சிங், "விடுப்பு உடனடியாக அனுமதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
ஜஸ்வீரின் முடிவை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள மற்றொரு பயனர், "நானாக இருந்தால் உடனடியாக லீவு எடுக்க அனுமதித்திருப்பேன்; நேர்மையாக இருக்கிறார் என்பது மட்டுமின்றி, வேலைத் திறனைப் பாதிக்கும் ஒரு நிலையில் இருக்கிறார். இரண்டே வாக்கியங்களில் அவர் ஒரு நல்ல ஊழியர் என்று தெரிகிறது. நீங்கள் லீவுக்கு அனுமதித்ததும் நல்ல விஷயம், நீங்கள் ஒரு சிறந்த பாஸ்!" என்று பாராட்டியுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
இந்த விவாதத்தில் Gen Z ஊழியர்களை, முந்தைய தலைமுறையான Millennials-உடன் ஒப்பிட்டு சிலர் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்தனர்.
ஒரு பயனர் கிண்டலாக, "Gen Z பிரேக்-அப் ஆனா லீவு போடுறாங்க. ஆனா, Millennials பிரேக்-அப் ஆகி, வாஷ்ரூமில் அழுதுட்டு வந்து, டெட்லைனுக்குள் வேலையை முடிச்சாங்க. Gen Z, HR-ஐ தெரபிஸ்ட் போலவும், அவுட்லுக்கை டைரி போலவும் பயன்படுத்துறாங்க" என்று கூறியுள்ளார்.
இன்னொருவர், அடுத்த மெயிலில் “ஐயா, புதன் கிரகம் பின்னோக்கிச் சுழலுது, அது சரியாகும் வரை WFH வேணும்” என்று கேட்பார்கள் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில், இந்தச் சம்பவம் நவீன பணியிடங்களில் வெளிப்படைத் தன்மைக்கும் மனநலத்துக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
