கொரோனா பரிசோதனைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை முடிவுகள் வர நாள் கணக்கில் ஆகிறது. அதனால், அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு சீனாவிடம் வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. 

இதனிடையே, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கு இதுவரை 1,600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 25 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

 இந்நிலையில் ரேபிட் கிட் பரிசோதனைகளை ராஜஸ்தான் தொடங்கியது. இதற்காக மாநிலத்திற்கு 10,000 ரேபிட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் மூலம் பெறப்பட்ட 95 சதவீத முடிவுகளில் முரண்பாடுகள் உள்ளதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து ராஜஸ்தானில் ரேபிட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இதனையடுத்து, கொரோனா பரிசோதனைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் தவறாக வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோளாறான துரித பரிசோதனை கருவிகளுக்கு மாற்றாக புதிய கருவிகள் பெற்றப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.