நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதத்தில் களம் இறங்கிய அரசு, தற்போது திருப்பதி தேவஸ்தான பிரசாதமான லட்டுகளை அட்டை பெட்டியில் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தது போல், திருப்பதியிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி நகரில் கடைகள், வீடுகள், பொது இடங்களில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அதே நேரத்தில் திருமலை திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டு மட்டும் பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பைகளை மாற்ற வேண்டும் என திருப்பதி கோயில் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக ஆலோசனை நடத்தியது.

முதலில், இயற்கை நூலிலைகளால் செய்யப்பட்ட பைகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் லட்டு பிரசாதம் நெய்யில் செய்யப்படுவதால் அந்த பைகள், நெய்யை ஈர்த்து வீணாகும் சூழல் உருவாகும் என கருதினர்.

பின்னர், அட்டை பெட்டிகளில் பிரசாத வழங்குவது ஆலோசிக்கப்பட்டது. இதிலும் நெய்யை உறிஞ்சக்கூடிய சூழல் இருப்பதால் சிக்கல் ஏற்பட்டது. ஆனால, நெய்யை உறிஞ்சாத அளவில் தரமான அட்டை பெட்டிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 விதமான அட்டைப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் லட்டுக்களை வைத்து நெய் உறிஞ்சுகிறதா? என பரிசோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலில் திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் இந்த பெட்டிகளில் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து திருச்சானூர் உட்பட பிற கோயில்களிலும் பிரசாதங்கள் இந்த பெட்டிகளில் வழங்கப்படும். பக்தர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தால், இந்த பெட்டிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.