தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வு குழு தலைவராக பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.கே.வசிஷ்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. 

இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயம் மனு அளித்தது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கை நிராகரித்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது.

 

அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல தமிழக அரசு அனுமதி மறுப்பதாகவும், கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான நிபுணர் குழு தமிழக அரசிடம் இல்லை என்றும் வேதாந்தா நிறுவனம் வாதிட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவானது மீண்டும் திங்களன்று பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட உள்ள குழுவின் தலைவராக கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி நியமிக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தினார். இதற்கு தமிழக அரசுத் தரப்பு மற்றும் மற்றொரு மனுதாரரான வைகோவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது

.

அந்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற வேண்டும் என்றும், இந்த குழுவானது 6 வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெ.வசிஷ்டர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னரே கூறி இருந்த படி இந்தக் குழுவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. இவர்களது பெயர்கள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.