மூன்றாவது பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இ-மெயில் மூலம் வந்த புதிய புகாரில், கட்டாய கருக்கலைப்பு மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளா மாநிலம், பாலக்காடு சட்டமன்ற உறுப்பினர் ராகுல் மாங்குட்டத்தில், மூன்றாவது பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு, பாலக்காட்டில் உள்ள கேபிஎம் ஹோட்டலில் இருந்த அவரை சிறப்பு விசாரணைக் குழு அவரை போலீஸ் காவலில் எடுத்தது.
இ-மெயில் மூலம் வந்த புதிய புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டாய கருக்கலைப்பு, பாலியல் வன்முறை மற்றும் நிதி மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புகாரளித்த பெண்ணின் விரிவான வாக்குமூலம் பத்தனம்திட்டாவில் பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்ட சிறப்புக் குழு, ராகுல் மாங்குட்டத்தில் பாலக்காட்டில் தங்கியிருப்பதை உறுதி செய்து, ரகசியமாக கைது நடவடிக்கையை மேற்கொண்டது. உள்ளூர் காவல்துறைக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட பின்னர், ராகுல் மாங்குட்டத்தில் பத்தனம்திட்டா ஏ.ஆர். முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குதான் அவரது கைது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறை நடவடிக்கையின் போது, ஹோட்டல் வரவேற்பறையில் இருந்தவர்களின் செல்போன்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. ஊழியர்கள் அறையில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, எட்டு பேர் கொண்ட போலீஸ் குழு அறைக்குள் நுழைந்து கைது செய்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, ராகுலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில் உயர்நீதிமன்றம் கைது தடையை வழங்கியது. இரண்டாவது வழக்கில், விசாரணை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. தற்போதைய வழக்கு மூன்றாவது குற்றச்சாட்டாகும்.
இந்த வழக்கு, எஸ்.பி. பூங்குழலி தலைமையில் அதிகாரிகள் விசாரித்தனர். ராகுல் விரைவில் திருவல்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக வளாகத்தில் கூடுதல் காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


