பசுக்களை பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு சட்டத்தை கையில் எடுத்து செயல்படும் பசுக் குண்டர்களுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி கட்டளையிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர முலாயம் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் பசுக்குண்டர்களால் தலித், முஸ்லிம்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து இன்று  தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். அவர்களை சமாளிக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்தும், பிரதமர் மோடிபேசியது குறித்தும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

பெரும்பாலான இந்துக்கள் பசுவை தாயாக மதித்து நம்புகிறார்கள். அப்படி இருக்கையில், சிலர் பசுக்களை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டு வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு சட்டத்தை மதிக்காமல் செயல்படும் பசுக் குண்டர்கள் மீது  ஒவ்வொரு மாநில அரசுகளும் கடுமையன நடவடிக்க எடுக்க வேண்டும். அவர்கள் மீது அரசியல், மத, சமூகரீதியான சாயம் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நாளை(இன்று) நடக்க உள்ள நிலையில், வேட்பாளர் தேர்வுக்கு பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு கிடைத்து, கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இரு வேட்பாளர்களும் அதிகபட்ச நாகரீகத்துடன், மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். பிரசாரத்தின்போது, எந்தவிதமான மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் வாக்களை வீணாக்காமல் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஊழல் குறித்து மோடி பேசுகையில் ஊழலுக்கு எதிராக அனைத்து கட்சித் தலைவர்களும் போராட வேண்டும். ஊழலையாரும் பாதுகாக்க கூடாது என்றார்.

மேலும், வரும் ஆகஸ்ட் 9-ந்தேதி வௌ்ளையனே வௌியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு நினைவுநாள் வருகிறது. அதை சிறப்பாக கொண்டாட அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார்.

ஜி.எஸ்.டி. வரிச்சட்டம் நாட்டில் சிறப்பாக அமலுக்கு வர ஒத்துழைத்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த மோடி, கூட்டாச்சி ஒத்துழைப்பின் அடையாளமாக ஒளிர்கிறது என்றார்.

சீனா, மற்றும் காஷ்மீர் பிரச்சினையில் நாட்டின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.