இலங்கை பிரதமராக பதவி வகித்து வரும் மஹிந்த ராஜபக்சே 5 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். தலைநகர் டெல்லி வரும் அவர் குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து உரையாட இருக்கிறார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இந்தியா வரும் ராஜபக்சே வாரணாசி, சாரநாத், புத்த கயா, திருப்பதி ஆகிய இடங்களுக்கும் செல்ல இருக்கிறார்.

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அதன்பிறகு அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவி விலகினார். இதையடுத்து முன்னாள் இலங்கை அதிபரும் கோத்தபய ராஜபக்சேவின் சகோதருமான மஹிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார். அதிபராக கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு முதல் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார். தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சே இந்தியா வருகிறார்.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த நவம்பரில் அதிபர் கோத்தபய டெல்லி வந்தபோது, இலங்கைக்கு ரூ.3,204 கோடி கடனுதவி அளிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வாக்குறுதியளித்திருந்ததாகவும் அதுதொடா்பான பேச்சுவாா்த்தை, இந்தப் பயணத்தின்போது இறுதிசெய்யப்படும் என்று மகிந்த ராஜபட்ச நம்பிக்கையுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வரும் மஹிந்த ராஜபக்சேவுடன் தமிழ் அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டைமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் வர இருப்பதாக கூறப்படுகிறது.