உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 5 நாட்களில் மட்டும் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு 5 நாட்களில் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, இந்த சோகமயமான சம்பவம் குறித்து தான் அடைந்த வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அப்பாவி குழந்தைகளின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உத்தரபிரதேச மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சோனியா கூறியுள்ளார்.

இதே போன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், பிரமோத் திவாரி, சஞ்சய் சிங் உள்ளிட்டோர் இன்று மருத்துவமனையை பார்வையிடுகின்றனர்.

குழந்தைகளின் இறப்புக்கு மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.