நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது பேசிய மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,

மத்திய அரசின் கள்ளநோட்டுக்கு எதிரான நடவடிக்கையை ஆதரிக்கிறோம். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆனால், அதற்கு இது வழியல்ல என தெரிவித்தார்.

கருப்பு பணத்தை அதிக அளவில் வைத்திருப்பவர்கள் தங்கள் படுக்கைகளுக்கு அடியில் பதுக்கி வைக்கவில்லை. ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். அரசாங்கத்தின் நடவடிக்கையால் மிகப்பெரிய முதலைகள் உயிர்பிழைத்து வாழ்கின்றன. சிறிய மீன்களே இறந்துகொண்டிருக்கின்றன.

500 மற்றும் 1000 ரூபாயை செல்லாது என்று அறிவித்துவிட்டால் ஊழல் ஒழிந்து விடுமா என கேள்வி எழுப்பிய அவர், தற்போது வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளால் ஊழல் இரட்டிப்பாகும் என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அனைத்து பகுதிகளிலும் பழைய நோட்டுக்களை பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.