வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எரிசக்தி துறை அமைச்சர் சிவக்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் தங்குவதற்கு அமைச்சர் சிவக்குமார் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவக்குமாரின் வீடு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையின்போது பல கோடி ரூபாய், நகை மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே அமைச்சர் சிவக்குமாரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சோதனையை விரைந்து முடிக்குமாறு அவரது சகோதரருரும், எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் கோரிக்கை விடுத்திருந்தார். 

சோதனையின்போது, கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கம் குறித்து பதிலளிக்க நேரில் ஆஜராகுமாறு, அமைச்சர் சிவகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. 

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான சிவகுமாரிடம், அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.