ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடலில் முக்கிய பங்காற்றிய பராக் ஜெயின், இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1 முதல் இரண்டு ஆண்டு காலம் இப்பதவியில் அவர் பணியாற்றுவார்.

ரா (RAW) என்ற இந்தியாவின் உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தின் நுணுக்கமான திட்டமிடலுக்குப் மூளையாக செயல்பட்டவர் பராக் ஜெயின் என்பது குறிப்பிடத்தக்கது.

1989ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த இந்திய காவல் பணி (IPS) அதிகாரியான பராக் ஜெயின், ஜூலை 1ஆம் தேதி முதல் 2 ஆண்டு காலப் பதவிக்காலத்தைத் தொடங்கவுள்ளார். தற்போதைய 'ரா' தலைவர் ரவி சின்ஹா ஜூன் 30 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், பராக் ஜெயின் இப்பதவியை ஏற்றுக்கொள்வார்.

அமைச்சரவையின் நியமனக் குழு இந்த வாரம் பராக் ஜெயினை ரா உளவு அமைப்பின் தலைவராக நியமிக்கும் முடிவை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திறமையான உளவு நிபுணர்:

இதற்கு முன்னர், பராக் ஜெயின் விமான ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்தார். வான்வழி கண்காணிப்பு, சிக்னல் இன்டலிஜென்ஸ் (SIGINT) நடவடிக்கைகள், புகைப்பட உளவு விமானங்கள் (PHOTINT), எல்லைகளை கண்காணித்தல் மற்றும் பிம்ப உளவு (IMINT) போன்றவற்றை கையாளும் முக்கியப் பதவியில் இருந்தார்.

மனித உளவு (HUMINT) மற்றும் தொழில்நுட்ப உளவு (TECHINT) ஆகிய இரண்டையும் ஒருங்கிணைப்பதில் பராக் ஜெயின் அசாத்திய நிபுணத்துவம் பெற்றவர். பராக் ஜெயின் 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டமிடலின் மூளையாக செயல்பட்டவர் என்று பாராட்டப்படுகிறார். இத்திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாதத் தளங்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தத் தேவையான உளவுத் தகவல்களை வழங்கினார்.

மே 7 அன்று தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் உட்பட எல்லை கட்டுப்பாட்டுக் கோடுக்கு அப்பால் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது. பராக் ஜெயின் தலைமையிலான குழுவால் சேகரிக்கப்பட்ட துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு முக்கிய பொறுப்புகள்:

காஷ்மீரில் விரிவான கள அனுபவம் கொண்ட பராக் ஜெயின், பாகிஸ்தான் தனது பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதில் முக்கியப் பங்காற்றுவார். மேலும், அண்டை நாடுகள் தொடர்பான சவால்கள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதிலும் பராக் ஜெயின் விரிவான அனுபவம் கொண்டுள்ளார். 2019 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மறுசீரமைக்கப்பட்டபோது, ஜம்மு காஷ்மீரில் பராக் ஜெயின் முக்கியப் பங்காற்றினார்.

பல முக்கிய பதவிகளை பராக் ஜெயின் வகித்துள்ளார். ஜனவரி 1, 2021 அன்று பஞ்சாபில் காவல் துறை இயக்குநர் ஜெனரல் (DGP) பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றார், அப்போது அவர் மத்தியப் பணியில் இருந்தார். பஞ்சாபில் பயங்கரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, பல்வேறு மாவட்டங்களில் எஸ்எஸ்பி மற்றும் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் போன்ற பதவிகளில் அவர் பணியாற்றினார்.

இலங்கை மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் பராக் ஜெயின் பணியாற்றியுள்ளார். கனடாவில் அவர் பணியாற்றிய காலத்தில், அந்நாட்டின் மண்ணில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களைக் கண்காணித்து வந்தார்.