இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்த கட்டுரைப் போட்டியை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி
இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் அங்குளள ஏராளமான விமானப்படைத் தளங்களை தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இதன்பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலையீட்டின் பேரில் இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த கட்டுரைப் போட்டி
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் மத்திய பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சகம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டி ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வாய்ப்பும் கிடைக்கும்.
கட்டுரை போட்டி எந்த மொழியில்?
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பாதுகாப்பு அமைச்சகம் இளம் மனங்களை தங்கள் குரல்களைக் கேட்க அழைக்கிறது. #ஆபரேஷன் சிந்தூர் - #பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மறுவரையறை செய்தல்" என்ற தலைப்பில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் @mygovindia இருமொழி கட்டுரைப் போட்டியில் பங்கேற்கவும். போட்டி தேதிகள்: ஜூன் 1 முதல் 30 வரை. ஒரு நபருக்கு ஒரு பதிவு மட்டுமெ. இந்தி அல்லது ஆங்கிலத்தில் இந்த கட்டுரை போட்டி நடைபெறும்'' என கூறப்பட்டுள்ளது.
