பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நீடிப்பதால் பண்டிகை காலங்களின் பொது இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடும் இடங்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் அசம்பாவித செயல்கள் ஈடுபடக்கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

குறிப்பாக நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் தசரா, துர்கா பூஜை மற்றும் மொஹரம் பண்டிகை போன்ற விழாக்களின்போது பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
யூரி தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பினைப் பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
