சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலையில் 40 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் தரிசனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும் சபரிமலைக்கு செல்ல அனைத்து வயது பெண்களும் முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு பெண்களான கனகதுர்கா மற்றும் பிந்து ஆகியோர் அதிகாலை 3.45 மணியளவில் 18-ம் படியேறி தரிசனம் செய்துள்ளனர். இவர்களுக்கு 40 வயது என்பதும் தெரியவந்துள்ளது. மலாபுரத்தை சேர்ந்த கனகதுர்கா, கோழிக்கோடை சேர்ந்த பிந்து என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இரண்டு பேரும் எந்தவித முன்னறிவிப்பின்றி, இரண்டு பேரும் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளனர். சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.