சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இறை வழிபாடு என்பது ஆண்களை போல பெண்களுக்கும் பொருந்தும், இதில் பாகுபாடு கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
எதன் அடிப்படையில் சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சபரிமலை கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது,  பெண்களை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.ஆண்களை போலவே பெண்களுக்கும் பிரார்த்தனை செய்ய சம உரிமை உண்டு. எனவே பெண்களுக்கு என்று பிரார்த்தனை செய்ய தனியாக சட்டம் இயற்ற முடியாது. இறைவழிபாடு என்பது ஆண்களை போல பெண்களுக்கும் பொருந்தும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.  கேரள அமைச்சர் சுரேந்தரன் கருத்து 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைப்பாடு என்று கேரள அமைச்சர் சுரேந்தரன் கூறியுள்ளார். கேரள அரசின் நிலைப்பாடு தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கேரள அரசு கட்டுப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.