சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யும் சன்னிதானத்தில் கேமரா, செல்போன் பயன்பாடு மற்றும் பத்திரிகை, ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மூலவர் ஐயப்பனின் படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் கேமரா செல்போனுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊடகங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊடகங்களுக்கும், தேவசம்போர்டுக்கும் இடையிலான புரிதல் அடிப்படையில், ஊடகங்களை கண்டு கொள்ளவில்லை. இதனால் அனைத்து நாட்களிலும் சன்னிதானத்தில் ஊடகங்கள் மூலம் மூலவருக்கான அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவை வீடியோ எடுக்கப்படுகிறது. 

கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் மூலவரின் அபிஷேகம், அலங்காரம் போன்றவை வெளியாகி வருகிறது. செல்போன் கேமரா மூலம், சில பக்தர்கள் சன்னதி முன் நின்று சுலபமாக படம் எடுத்து செல்கின்றனர். இதை தவிர்க்க சன்னிதானத்தில் செல்போனை சுவிட்ச்ஆப் செய்து வைத்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. 

கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி அனுமதிக்கப்பட்டுள்ள நாட்களில் மட்டும் ஊடகங்களை சன்னிதானம் முன் அனுமதிக்கலாமா என ஆலோசனை நடந்து வருவதாக தேவசம்போர்டு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.