சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரிழந்ததால் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம். 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல விளக்கு, மகர விளக்கு பூஜைக்காக திறப்பட்டுள்ள நிலையில், தினமும் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் 90,000 பக்தர்கள் சபரிமலை கோயிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 20,000 பம்பை மற்றும் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங்கும் அடங்கும்.

சபரிமலை கூட்ட நெரிசலில் பெண் பலி

கடந்த இரண்டு நாட்களாக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப சாமியை பார்க்க முண்டியடித்து சென்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர் உயிரிழந்தார். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேரள அரசு திணறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சபரிமலையில் கூட்ட நெரிசலால் பக்தர்கள் உயிரிழந்ததால் கேரள உயர்நீதிமன்றம் பொங்கி எழுந்துள்ளது. "காவல்துறையினர் கூட்டத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அறிவியல் பூர்வமான முடிவுகளை எடுக்க ஒரு சரியான அமைப்பு இருக்க வேண்டும். குழந்தைகள் கூட அங்கு அவதிப்படுகிறார்கள். அதை கவனிக்க வேண்டும். இப்பகுதியில் இவ்வளவு மக்களை அனுமதிக்க முடியாவிட்டால், ஏன் இவ்வளவு பெரிய எண்ணிக்கையை அனுமதிக்க வேண்டும்?

பக்தர்கள் இறப்பதை அனுமதிக்க முடியாது

இந்த வகையான நெரிசல் கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும். பக்தர்கள் மூச்சுத் திணறி இறப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்கள் பக்தியுடன் வருகிறார்கள். மேலும் சரியான ஏற்பாடுகளைச் செய்வது அதிகாரிகளின் பொறுப்பு. இந்த பெரிய பண்டிகைக் காலத்தில் ஏற்பாடுகளுக்கு சரியான ஒருங்கிணைப்பு இல்லை" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தனர்.

ஸ்பாட் புக்கிங் 5,000 ஆக குறைப்பு

சபரிமலையில் கூட்டத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர திங்கள்கிழமை வரை ஒவ்வொரு நாளும் 5.000 ஸ்பாட் புக்கிங் மட்டுமே அனுமதிக்க நீதிபதிகள் ஏ ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் உத்தரவை பிறப்பித்தனர். கட்டுப்பாடற்ற ஸ்பாட் புக்கிங் கூட்டத்திற்கு வழிவகுத்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்பாட் புக்கிங் 20,000 ல் இருந்து 5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.