சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் பலியாகி உள்ளார். இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல விளக்கு, மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் சபமரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு வருகின்றனர். தினமும் 90,000 பக்தர்கள் சபரிமலை கோயிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சபரிமலையில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சபரிமலையில் ஒரு பக்தர் பலி
லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டு ஐயப்ப சாமியை பார்க்க முண்டியடித்து சென்றனர். கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி ஐயப்ப பக்தர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பக்தர் கூட்ட நெரிசலால் மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர் பம்பாவிலிருந்து நீலிமலை ஏறும் போது அப்பாச்சிமேடு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை
பம்பாவிலிருந்து ஆம்புலன்சுக்கு எந்த உதவியும் கிடைக்காததால் பம்பாவிலிருந்து பத்தனம்திட்டாவிற்கு அனுப்பப்பட்டனர். பத்தனம்திட்டாவிலும் தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரள அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இந்த நிலையில், சபரிமலையில் கூட்டம் கட்டுக்குள் இருப்பதாக டிஜிபி ரவாடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நவம்பர் 17ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்ததாக டிஜிபி தெளிவுபடுத்தினார். வெர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்த நாளிலேயே பக்தர்கள் வர வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
போதுமான காவல்துறையினர் பாதுகாப்பு
சபரிமலையில் போதுமான காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ளனர். திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்ததே பிரச்சனைக்கு காரணம் என்றும் 5,000 பேருந்துகள் வந்ததாகவும், வந்தவர்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட்டதாகவும் டிஜிபி கூறினார். வழக்கமாக முதல் நாட்களில் இவ்வளவு கூட்டம் வருவதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கூட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.


