கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஏராளமானோர் கொலை செய்யப்படுவதால், அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு ரூ. ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் பிரமுகர் குந்தன்சந்திரவாத் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆர்பாட்டம்

கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்கள் பலர் கொல்லப்படுவதைக் கண்டித்து, மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன்நகரில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் உஜ்ஜைன் தொகுதி பா.ஜனதா எம்.பி. சிந்தாமணி மாலவியா, உள்ளிட்ட உள்ளூர் கட்சித் தலைவர்கள், ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு இருந்தனர்.

300-க்கு 3 லட்சம்

அப்போது உஜ்ஜைன் நகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் குந்தன் சந்திரவாத் பேசினார். அவர் பேசுகையில், “ கேரள மாநிலத்தில் இதுவரை 300க்கும் அதிகமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், கரசேவகர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கொல்லப்பட்டுள்ளனர். நாங்கள் கம்யூனிஸ்ட்களுக்குஎச்சரிக்கை விடுக்கிறோம், 3 லட்சம் பேரின் தலைகளை வெட்டி பாரத மாதாவுக்கு மண்டை ஓடு மாலையாக போடுவோம்.

கோத்ரா மறந்துவிட்டதா?

கோத்ரா ரெயில் எரிப்பும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களும் கம்யூனிஸ்ட்களுக்கு நினைவு இருக்கும். அதை மறந்துவிட்டீர்களா? 56 கரசேவகர்களை மட்டுமே கொன்றார்கள், ஆனால், நாங்கள் 2 ஆயிரம் பேரைக் கொன்று சுடுகாட்டுக்கு அனுப்பினோம். புரிந்துகொள்ளுங்கள் இடது சாரிகளே. இந்துக்கள் எப்போதும் தூங்கிக்கொண்டு இருப்பவர்கள் அல்ல.

ரூ.ஒரு கோடி பரிசு

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டுவருபவர்களுக்கு, ரூ. ஒரு கோடி மதிப்புக்கும் அதிகமான எனது சொத்துக்களை நான் தருகிறேன்.''  என மிரட்டல் விடுத்தார்.

எம்.பி., போலீஸ் அதிகாரிகள் , உள்ளூர் பா.ஜனதா பிரமுகர்கள் மத்தியில் இப்படி கொலைவெறியோடு ஆர்.எஸ்.எஸ். நபர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக பேச்சு உரிமை

இது குறித்து உஜ்ஜைன் ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ரத்னதீப் நிகமிடம் கேட்டபோது, “ குந்தன் சந்திரவாத் அவரின் தனிப்பட்ட கருத்தை பேசியுள்ளார். அது அவரின் ஜனநாயக உரிமை. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாடு கிடையாது. வன்முறையில் நாங்கள் இறங்கமாட்டோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆத்திரத்தில் அவர் ேபசி உள்ளார்'' என்று தெரிவித்தார்.

அதிர்ச்சியானது, ஏற்றுக்கொள்ளமுடியாதது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இது குறித்து கூறுகையில், “ ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரின் இந்த பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை கடுமையாக கண்டிக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வருக்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பொதுப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது. மத்திய அரசு பக்கபலமாக இருக்கிறது என்ற அசட்டு துணிச்சலில் இப்படி பேசுகிறது. வன்முறையில் முழுமையாக நம்பிக்கை வைத்து, கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர்  பிரனராயி பதில்...

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் இது குறித்து கேட்டபோது, “ ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஏற்கனவே மாநிலத்தில் பல தலைகளை எடுத்துவிட்டார்கள். கொலை செய்து இருக்கிறார்கள். நாங்கள் செயல்படவில்லையா?'' என புன்னகையுடன் தெரிவித்தார்.