இனி வரும் காலங்களில் மாதம் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் பொது மேலாளர் திரு. கும்பகர்ணன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள மத்திய அரசின் ஐ.ஐ.ஐ.டி.எம் எனும் கல்வி நிறுவனத்தில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சியை இஸ்ரோ நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் பொது மேலாளர் கும்பகர்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் மற்ற நாடுகளின் உதவியின்றி நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்னும் ராக்கெட் தயார் நிலையில் இருப்பதாகவும், இது வரும் டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள் சுமார் நான்காயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் மாதம் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் திரு. கும்பகர்ணன் தெரிவித்தார்.
