சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் நதிகள் இணைப்புத் திட்டத்துக்கான முதல் கட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டி வருகிறார். கோடை காலத்தில் வறட்சியாலும் மழைக்காலத்தில் வெள்ளத்தாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

வறட்சி மற்றும் வெள்ளத்தால் விளைச்சலும் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தவிர பல்வேறு தரப்பினரும் நதிகளை இணைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

ரூ. 6 லட்சம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டப் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் கட்டமாக வட மாநிலங்களில் கங்கை உட்பட 60 நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இத்திட்டத்தை விரைவுபடுத்துவதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக ஒப்புதல் வழங்குவதில் அவர் அமைச்சகங்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.

அதன் அடிப்படையில் முதல் கட்டப் பணிகளுக்கான ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும் முழு பணிகளுக்கான ஒப்புதலும் இந்த ஆண்டுக்குள் கிடைத்துவிடும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பால்யன் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மாநிலங்களுக்கு இடையேயான கர்னாவதி, பெட்வா நதிகளை 22 கி.மீ. நீள கால்வாய் மூலம் இணைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2002-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நதிகள் இணைப்புக்கு திட்டமிடப்பட்டது. ஆனால், நதிநீர் பங்கீடு தொடர்பாக மாநில அரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் திட்டத்தை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இம்முறை, பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நதிகள் இணைப்புத் திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்த மாநிலங்களில் பிரச்சினை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.