பட்ஜெட் கூட்டத்தொடர், 5 மாநிலத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்படி உத்தரவு ஆகியவற்றால், பிப்ரவரி 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் ஏ.டி.எம்.களில்இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகளை நீக்கி ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தது.

ரூபாய் நோட்டு தடை

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார்.

முன்ஏற்பாடுகள் இல்லாமல் அரசு செய்த இந்த நடவடிக்கையால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளானார்கள். மக்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்துகூட பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். வங்கியின் வாசலில் பணம் எடுக்க காத்திருந்த போது இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 100 பேரைத் தாண்டியது.

முடக்கம்

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடையின் அறிவிப்பு கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் கடுமையாக எதிரொலித்தது. காங்கிரஸ் தலைமையில்திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கினர்.

இதனால், செய்வது அறியாது திகைத்த மத்தியஅரசால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. குறிப்பாக ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றி முடியாமல் தோல்வி அடைந்தது. ஒட்டுமொத்தத்தில், குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் அமளியால் முடக்கப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டம்

இந்த சூழலில், பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ( 31-ந்தேதி ) தொடங்குகிறது. ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் தாக்கம் பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆதலால், அதற்கு முன்னதாக அனைத்து கட்சியையும் சமாதானப்படுத்தும் முயற்சியாக, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது, பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்றம் சுமூகமாக நடக்க அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோளும் முன்வைத்தார்.

கிலி அறிவிப்பு

இந்த கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சிகள் நிச்சயம் பிரச்சினை ெசய்யும்என்பதன் முன்னோட்டமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திரிணாமுல்காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. பட்ஜெட் தாக்கலின் போதும் பங்கேற்கமாட்டோம் என மிரட்டல் விடும் தோரனையில் பேசினர்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, இந்த கூட்டத்தொடரிலும் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ‘கிலி’ ஏற்படுத்தினர். இதனால், பட்ஜெட் கூட்டத் தொடரும் அமளியால், வீணாய் போய் விடுமோ? என மத்திய அரசு மிகவும் அச்சமடைந்தது.

சமாதான முயற்சி

இப்போதுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையான ஏ.டி.எம்., வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்ற ஒருவிசயத்தை செய்தால், நாடாளுமன்றம் ஓரளவுக்கு இடையூறு இல்லாமல் நடக்கும் என மத்திய அரசு எண்ணியது.

அதனால், மத்தியஅரசு ரிசர்வ வங்கிக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கிடுக்கிப்பிடி

அடுத்ததாக, சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் 5 மாநிலங்களில்வேட்பாளர்கள் ஏ.டி.எம்., வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் , ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்ததது.

ஆனால், அதற்கு ரிசர்வ் வங்கியோ அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. மீண்டும் கண்டிப்புடன் கடிதம் எழுதிய தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி என்பது எங்களுக்கு கட்டுப்பட்டதுதான், தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கு மட்டுமாவது கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கூறியது. 

வேறு வழியே இல்லை

ரிசர்வ் வங்கியிடம் போதுமான பணம் கையிருப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாது. ஏனென்றால், சமீபத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் இதுவரை ரூ.9.2 லட்சம் கோடி பணம் மட்டுமே புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். ஆக இன்னும் ரூ.5.5. லட்சம் கோடி பணம் புழக்கத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த சூழலில், ஒரு புறம் பட்ஜெட் கூட்டத்தொடரை நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற மத்தியஅரசின் நெருக்கடி, 5 மாநிலத்துக்கு பணம் எடுக்க கட்டுப்பாடுகளை நீக்கித்தான் தீர வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி உத்தரவு ஆகியவற்றால் வேறு வழியின்றி ரிசர்வ் வங்கி பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை பிப்ரவரி 1-ந்தேதி முதல் நீக்குவதாகத் தெரிவித்துள்ளது.