ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ரூ.4.94 லட்சம் கோடி மட்டுமே இருந்தன…ரிசர்வ் வங்கி தகவல்….
பிரதமர் மோடி, ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என கடந்த மாதம் 8-ந் தேதி அறிவிக்கும்போது, ரிசர்வ் வங்கியிடம் ரூ.2 ஆயிரம் புதிய நோட்டு ரூ.4.94 லட்சம் கோடிக்கு மட்டுமே கையிருப்பு இருந்தன என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது.
இது நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் மதிப்பான ரூ. 20 லட்சம் கோடியில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மனு
மும்பைச் சேர்ந்தவர் அணில் கல்காலி. சமூக ஆர்வலரான இவர், ரூபாய் நோட்டு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடும் போது புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பு நோட்டுகள் குறித்தும், எப்படி ஆயத்தமாகி இருந்தது குறித்தும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு செய்து இருந்தார்.
ரூ.20 லட்சம் கோடி
நவம்பர் 8-ந்தேதி பிரதமர் ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடும் போது, நாட்டில் ரூ. 500 நோட்டுகள் ரூ. 9.13 லட்சம் கோடியும், ரூ. 1000 நோட்டுகள் ரூ.11.38 லட்சம் கோடி இருந்தன. ஒட்டுமொத்தமாக ரூ.20 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தன.
நான்கில் ஒருபகுதி
அப்போது, ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் எண்ணிக்கையில் 247.3 கோடி இருந்தன. மதிப்பில் ரூ. 4.94 லட்சம் கோடியாகும்.
இந்த தகவலை நவம்பர் 9-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை ரூபாய் நோட்டுகள் எந்த அளவுக்கு இருப்பு இருக்கிறது எனும் தகவலை நிறுத்திவைத்தோம். இது வெளிவந்தால், தனிநபரின் பாதுகாப்பு மற்றும் உயிருக்கு ஆபத்துக்கு நேரலாம் என்பதால் தெரிவிக்காமல் விலக்கு அளிக்கப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
உரிய விளக்கம் இல்லை
இது குறித்து சமூக ஆர்வலரான அணில் கல்காலி கூறுகையில், “ மக்களுக்கு தெரியாமல் தகவல் ஏன் மறைக்கப்பட்டது என்பதற்கு சரியான விளக்கத்தை ரிசர்வ் வங்கி அளிக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களாக, ரூபாய் இருப்பு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை என மட்டும் தெரிவித்தது.
ஆனால், ரூபாய் நோட்டு அறிவிப்பின் பாதிப்பை, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் விளையாடப்போகும் முடிவு வங்கி முன்பே நன்கு தெரிந்துள்ளது. ரூபாய் நோட்டு குறித்து ரிசர்வ் செல்லாத அறிவிப்பு இந்த அளவுக்கு அவசரமான முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், நாட்டில் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் புழக்கத்தில் இருந்த 86.69 சதவீத ரூபாயை துடைத்து எரிந்து விட்டு, ஒரு பகுதி அதாவது 24.11 சதவீதம் மட்டுமே புதிய ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்துக்கு கொண்டுவந்துள்ளது. இந்த முடிவு நியாயமானது இல்லை'' எனத் தெரிவித்தார்.
ஆபத்தான உதாரணம்
இது குறித்து தகவல் அறியும் உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையர் சைலேஷ்காந்தி கூறுகையில், “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புகளை ரிசர்வ்வங்கி மீறியுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு எந்த தகவலை மறைக்க வேண்டும், வெளியிடக்கூடாது என்பதை முடிவு செய்ய அதிகாரம் இல்லை. அது ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இது ஆபத்தான, சட்டவிரோதமான செயலாகும். ஆர்.டி.ஐ. சட்டத்தின் செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இதே விசயத்தை மற்ற அரசு நிறுவனங்களும் செய்ய முன்வருவார்கள். அனைத்து அரசு அதிகாரிகளும் இதையே முன் உதாரணமாகக் கொள்வார்கள்'' எனத் தெரிவித்தார்.
