2025-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரை தாங்கள் தடுத்ததாக சீனா கூறியுள்ளது. ஆனால், எந்த மூன்றாம் தரப்பு தலையீடும் இன்றி, இருநாட்டு இராணுவ அதிகாரிகளின் நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே அமைதி திரும்பியதாக இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தைத் தணிப்பதில் தாங்கள் முக்கியப் பங்காற்றியதாக சீனா புதிய கூறியுள்ளது. ஏற்கெனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதே போன்ற கருத்தை முன்வைத்திருந்த நிலையில், சீனாவின் இந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீன அமைச்சரின் பேச்சு

பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச நிலவரங்கள் குறித்த கருத்தரங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), உலகின் பல மோதல்களில் சீனா மத்தியஸ்தம் செய்துள்ளதாகப் பட்டியலிட்டார்.

"நாம் ஒரு நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற நிலைப்பாட்டை எடுத்து, பிரச்சினைகளின் மூல காரணங்களைக் கண்டறிந்து அமைதியை நிலைநாட்டுகிறோம். அந்த வகையில் மியான்மர், ஈரான் அணுசக்தி விவகாரம், இஸ்ரேல் - பாலஸ்தீனம் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் ஆகியவற்றில் சீனா மத்தியஸ்தம் செய்துள்ளது," என்று அவர் கூறினார்.

மோதலுக்குக் காரணம் என்ன?

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இந்திய இராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் கடுமையான இராணுவ மோதல் நீடித்தது.

"யார் தலையீடும் இல்லை!"

சீனா மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்தவொரு 'மூன்றாம் தரப்பு' மத்தியஸ்தத்தையும் ஏற்கவில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின்படி, மே 10-ஆம் தேதி மதியம் 3:35 மணியளவில் இரு நாடுகளின் இராணுவச் செயல்பாட்டு தலைமை இயக்குநர்கள் (DGMOs) நேரடியாகத் தொலைபேசியில் பேசி போரை நிறுத்த முடிவெடுத்தனர்.

எவ்வித வெளிநாட்டுத் தலையீடும் இன்றி, நேரடி இராணுவப் பேச்சுவார்த்தை மூலமே அமைதி திரும்பியதாக இந்தியா கூறுகிறது.

சீனாவின் இரட்டை வேடம்

சமீபத்தில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம் (USCC) வெளியிட்ட அறிக்கையில், சீனா இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல் பிரச்சாரத்தை (Disinformation Campaign) முன்னெடுத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தது.

பிரான்சின் ரஃபேல் போர் விமானங்களின் விற்பனையைக் குறைத்து, தனது நாட்டின் J-35 விமானங்களை விற்க சீனா செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலியான புகைப்படங்களைப் பரப்பியதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக இருக்கும் சீனா, ஒருபுறம் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி செய்துகொண்டு, மறுபுறம் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறுவது விசித்திரமானது என இந்திய அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.