வங்கிகளில் இருந்து எப்போ தாராளமா பணம் எடுக்கலாம்? ரிசர்வ் வங்கி சொல்லும் ரகசியம்…..
கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும், கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கவும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார், அன்று முதல் பொது மக்களிடம் பணப் புழக்கம் முற்றிலும் குறைந்து போனது மட்டுமல்லாமல் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளையும் ரிசர்வ் வங்கி அறிவித்தது,
அதே நேரத்தில் புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வெளியிட்டது. முதலில் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன. பின்னர் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தற்போது மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், மேற்கு வங்க மாநிலம் சல்போனி மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய இடங்களில் உள்ள ஆர்பிஐ நோட்டு அச்சடிக்கும் அச்சகங்களில் புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் தலைவிரித்தாடும் பணத்தட்டுப்பாடு பிரச்சனை எப்போது நீங்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வங்கி உயரதிகாரி ஒருவர்.
அதாவது புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள பணத்தில் 80 சதவீத நோட்டுக்கள் வங்கிகளுக்கு சென்றடைந்த பின்னர் தான் வங்கிகளில் இருந்து தாராளமா பணம் எடுக்க அனுமதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்..
.முதலில் கூட்டுறவு வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் பிறகு அனைத்து வங்கிகளுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
