குடியரசு தினம் 2024: டெல்லி விமான நிலையத்தில் தினமும் 2 மணி நேரம் சேவை நிறுத்தம்!
டெல்லி விமான நிலையத்தில் இன்று முதல் குடியரசு தினம் வரை தினமும் 2 மணி நேரத்திற்கும் மேலாக விமான சேவை நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.
அந்தவகையில், நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அப்போது, டெல்லி கடமைப்பாதையில் ஆயுதப்படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் துறைகளின் அலங்கார அணிவகுப்பு, குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள், விமான சாகசம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி விமான நிலையத்தில் இன்று முதல் குடியரசு தினம் வரை தினமும் 2 மணி நேரத்திற்கும் மேலாக விமான சேவை நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி வரை தினமும் காலை 10.20 மணி முதல் மதியம் 12.45 மணி வரை டெல்லி விமான நிலையத்தில் விமானங்களின் வருகையோ, புறப்பாடோ இருக்காது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சில விதிவிலக்குகளுடன் திட்டமிடப்படாத விமானங்களுக்கு மட்டுமே தடைகள் அமலில் இருந்தன. ஆனால், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், விமானப் பணியாளர்களுக்கான அறிவிப்பான NOTAM-இல் திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
புதிய கட்டுப்பாடுகளின்படி, குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 19ஆம் தேதி (இன்று) முதல் வருகிற 26ஆம் தேதி வரை டெல்லி விமான நிலையத்தில் காலை 10.20 முதல் மதியம் 12.45 வரை விமானங்களின் வருகையோ, புறப்பாடோ இருக்காது. அதேபோல், குடியரசு தினம் வரை பாதுகாப்பு கருதி தேசிய தலைநகர் டெல்லியில் வான்வெளி தடைகளும் அமலில் இருக்கும்.