தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜனவரி 19ஆம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்துள்ளார். பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி காரில் புறப்பட்டு சென்றார். வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடியை வரவேற்று சாலையில் இருபுறமும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வருகையையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ட்ரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, விழா முடிந்ததும் இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகை சென்று ஓய்வெடுக்கவுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை தள்ளி வைப்பு!
ஜனவரி 20ஆம் தேதி (நாளை) காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார். பிற்பகல் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்கிறார்.
ஜனவரி 21ஆம் தேதி காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கவுள்ளார். அங்கிருந்து காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு பிரதமர் செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் காலை 10.25 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.