ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதுதல், தடம்புரண்டு விபத்துக்குள்ளாகுதல் போன்றவற்றின் மூலம் அதிகமான பயணிகள் காயம் அடைகின்றனர், பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு பின்னனியில் ரெயில்வே பணியாளர்களின் கவனக்குறைவான செயல்பாடே காரணம் என்று ரெயில்வே துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஏறக்குறைய 151 பயணிகள் பலியானார்கள். இந்த விபத்துக்குபின், ரெயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுவை ரெயில்வே துறை அமைச்சகம் அமைத்தது.

அந்த குழுவில் ரெயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் பலர் இடம் பெற்று இருந்தனர். இந்த குழு இதற்கு முன் ரெயில்வே துறையில் நடந்த விபத்துக்கள், தடம்புரண்டு விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அது தொடர்பாகவும் மீண்டும் விசாரணை நடத்தினர். அதன் முடிவில், ஓர் அறிக்கையை ரெயில்வே அமைச்சகத்திடம் அளித்துள்ளனர்.
அதில், ரெயில்கள் தடம்புரண்டதால் ஏற்பட்ட விபத்துக்களில் 60 சதவீதத்துக்கு ரெயில்வே பணியாளர்கள் முன்எச்சரிக்ைகயாக செயல்படாததே மிகப்பெரிய காரணம் எனத் தெரிய வந்தது. ரெயில்கள் வரும் முன், பாதைகளை சரி பார்த்தல், முறையற்ற பராமரிப்பு ஆகியவற்றால் ரெயில் தடம்புரண்டு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அதிகமான பயணிகள் காயம் அடைந்துள்ளனர், உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர்.

அதிகமான ரெயில்கள் தடம் புரண்டு விபத்துக்கள் ஏற்படுவதற்கு இருப்பு பாதையில் ‘வெல்டு’ வைத்தலில் குறைபாடு, விரிசல்களை கண்டுபிடிக்காததே காரணம். ஆதலால், அடுத்து வரும் காலங்களில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரெயில் பாதையில் ‘வெல்டு’ வைக்க வேண்டும், பாதைகளை முறையாக கண்காணிக்க வேண்டும்.
தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்தும் போது, குறைவான மனித வளம் மட்டுமே தேவைப்படும். ரெயில்வே பாதையை கண்காணிப்பது என்பது சற்று குழப்பமான செயல்தான். ஆதலால், அதை முடிந்த அளவுக்கு தானியங்கி முறையில் கண்காணித்து பராமரிப்பு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
