RBI ரெப்போ விகிதத்தை 0.50% குறைத்து 5.5% ஆக அறிவித்துள்ளது. இது நிலையான வட்டி வருமானத்தில் நம்பிக்கை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக உள்ளது. எஃப்டி வட்டி குறையும் வாய்ப்பு உள்ளதால், முதலீட்டாளர்கள் மாற்று முதலீட்டு வழிகளை ஆராயலாம்
இந்திய ரிசர்வ் வங்கி திடீரென ரெப்போ விகிதத்தை 0.50% குறைத்து 5.5% ஆக அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டில் மூன்றாவது முறை வட்டி விகிதம் குறைக்கப்படும் நடவடிக்கையாகும். இந்த முடிவு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் குறைப்பால் வீட்டுகடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது நிலையான வட்டி வருமானத்தில் நம்பிக்கை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் எஃப்டியை தேர்வு செய்யும் நிலையில், தற்போது அதற்கான வட்டி விகிதம் அல்லது வட்டி வருமானம் குறையும் என்பதால் சிறு முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
FD வட்டி குறையும் வாய்ப்பு
அனைத்து வங்கிகளும் அடுத்த நாட்களில் தங்களுடைய நிலையான வைப்பு வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களால் ஒரு வருடம் காலத்திற்கான 7 சதவீதம் வட்டியுடன் கிடைக்கும் ஒரு லட்ச ரூபாய் எஃப்டி, இப்போது 6.5 சதவீதமாக ஆக மாற்றப்பட்டால், வருடத்திற்கு 5,000 ரூபாய் வரை வட்டி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதுவே பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளவர்கள் கூடுதல் வருமானம் இழப்பை பெறுவார்கள். இந்த நிலையில் சில மாற்று வழிகளை கடைபிடித்தால் வருமான இழப்பில் இருந்து தப்பிக்கலாம் என பங்குச்சந்தை ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
எஃப்டி லாடரிங் (FD Laddering) முறையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முயற்சிக்கலாம். நீண்ட காலத்திற்கான ஒற்றை எஃப்டி செய்யாமல், வெவ்வேறு கால பருவங்களில் எஃப்டி செய்வது. இது வட்டி விகித மாற்றங்களை சமநிலைப்படுத்த உதவும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) போன்றவை அதிக வட்டி தர வாய்ப்பு உள்ளதால் அதில் முதலீடு செய்து கூடுதல் வருமானம் ஈட்டலாம்.குறுகிய கால கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்து குறித்தும் முதலீட்டாளர்கள் யோசிக்கலாம். நல்ல மதிப்பீடு பெற்ற நிறுவனங்கள் வழங்கும் 2–3 வருட பாண்டுகள், எஃப்டியைவிட சிறந்த வருமானம் தரக்கூடியவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகள்
ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பங்கு மற்றும் கடன் சந்தைகளில் கலந்து முதலீடு செய்யும் இவை, மிதமான அபாயத்தில் அதிக வருமானம் தர வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் குறித்து விவரங்களை தெரிந்து கொண்டு பிறகு முதலீடு செய்வது நல்லது.
பணவீக்கம் புள்ளிகளை கவனிக்க வேண்டும்
2025–26ஆம் ஆண்டிற்கான CPI பணவீக்கம் 3.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இது போல குறைந்த பணவீக்க சூழலில், உண்மையான வருமானம் குறைவாகவே இருக்கும். எனவே பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறித்து பரிசீலிக்கலாலம். இந்த வட்டி விகித மாற்றம், நிலையான வைப்பு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு நோக்கங்களையும், முறைமைகளையும் மறுபரிசீலனை செய்யும் அவசியத்தை வலியுறுத்துகிறது. பாதுகாப்பான வருமானத்திற்காக எஃப்டி நல்ல தேர்வாக இருந்தாலும், குறையும் வட்டி சூழலில், மாற்றுப் பங்களிப்புகளை ஆராய்வது முக்கியமாகிறது.
