இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கிவிட்ட நிலையில், கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் குடும்பங்களை பிரிந்து சுயநலமில்லாமல் மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்தே ஊரடங்கின் அவசியம், கொரோனாவின் தீவிரம், சமூக விலகல் மற்றும் தனிமைப்படுதலின் அவசியம், கொரோனாவுக்கு எதிரான போரை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது ஆகியவை குறித்து வீடியோ வெளியிட்டு வரும் ராஜ்யசபா எம்பி ராஜீவ் சந்திரசேகர், தற்போது, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள ராஜீவ் சந்திரசேகர், இதுவரை கொரோனாவின் தீவிரம், ஊரடங்கின் அவசியம், கொரோனாவுக்கு எதிரான போர் குறித்து பல பேசியிருக்கிறோம். ஆனால் இந்த வீடியோ சற்று ஸ்பெஷலான முக்கியமான காரணத்திற்கானது.

பெங்களூருவில் கொரோனா சிகிச்சையளித்துவரும் விக்டோரியா மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், டெக்னீசியன்கள் என மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பணியாளர்களும் கொரோனாவை விரட்டுவதற்காக ஓய்வில்லாமல், கடந்த சில வாரங்களாக நேரத்தை எல்லாம் பற்றி கவலைப்படாமல் உழைத்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவது, தனிமைப்படுத்தப்பட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்வது, பெங்களூரு மாநகரை கொரோனாவிலிருந்து காப்பது ஆகிய நோக்கத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். 

நாம் செய்ய வேண்டியதெல்லாம்.. ஒற்றுமையாக இருந்து அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை விரட்டி கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.