கொரோனாவை தடுக்கும் நோக்கில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த 21 நாள் ஊரடங்கு காலக்கட்டத்தில் கொரோனாவை முழுமையாக தடுக்க முடியவில்லை. எனவே கொரோனாவிலிருந்து மக்களை காக்க ஊரடங்கை நீட்டித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு காலத்திலேயே, ஏழை, எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை மிக மோசமடைந்தது. தினசரி வருமானத்தை நம்பியிருக்கும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் ஏழை மக்களின் சோகம் நீண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் ஏழை மக்களுக்காக திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. மாநில அரசு, ரேஷன் கடைகளின் மூலமாக உணவுப்பொருட்களை இலவசமாக வழங்குகிறது. ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து வந்து வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் என அரசு உதவி போய் சேராத தரப்பினரும் உள்ளனர். 

இப்படியான நெருக்கடியான சூழலில், அரசு மட்டுமே உதவி செய்ய வேண்டும் என்று நினைக்காமல் பல தன்னார்வலர்களும் தன்னார்வ அமைப்புகளும் தாமாக முன்வந்து உணவுப்பொருட்கள், உணவு பொட்டலங்கள், மாஸ்க்குகள் ஆகியவற்றை ஏழை மக்களுக்கு வழங்கிவருகின்றனர். 

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலில், மக்களுக்காக உதவிவரும் தன்னார்வலர்களும் மற்ற அமைப்புகளும் தான் உண்மையான ஹீரோக்கள் என ராஜ்யசபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

கர்நாடக ஆர்.எஸ்.எஸ் சார்பில் இதுவரை செய்யப்பட்டுள்ள உதவிகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு, ஏழை மக்களுக்கு உதவும் தன்னார்வலர்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

கர்நாடக ஆர்.எஸ்.எஸ் சார்பில் 1,45,254 ரேஷன் கிட்களையும் 3,03,659 உணவு பொட்டலங்களையும் வழங்கியிருப்பதாகவும் 1258 யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள ராஜீவ் சந்திரசேகர், இதன்மூலம் 5,17,953 பேர் பயனடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்று உதவும் அனைவருமே ரியல் ஹீரோக்கள் என பாராட்டு தெரிவித்துள்ளார்.